sireku
ஐரோப்பிய காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்று 71 ஆண்டு கால வரலாற்றில் நாம் கற்ற பாடங்களும் படிப்பினைகளும் தான் என்ன?

தேசத்தின் மீது முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? தேசம் பற்றிய முஸ்லிம்களது பார்வைகள் எவ்வாறானது? என்றெல்லாம் பெரும்பான்மை சமூகத்தினர்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்கள் எங்கே எத்தருணத்தில் தவறிழைப்பார்கள், அவர்களை எவ்வாறு தேச துரோகிகளாக அடையாளப்படுத்தலாம் அல்லது இந்த தேசத்தில் இடம்பெறுகின்ற எந்தவோர் துரதிஷ்டவசமான செயல்களையும் முஸ்லிம்கள் மீது எவ்வாறு பலி சுமத்தலாம் என்றெல்லாம் இங்கே ஓர் கூட்டம் சீரியஸாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு சிந்திப்பவர்களது அடிப்படை நோக்கம் அரசியல் ரீதியான தனது இருப்பினையும்  வாக்கு வங்கிகளையும் இனரீதியாக கட்டமைத்துக்கொள்வதேயாகும்.

71 ஆண்டு கால சுதந்திர இலங்கையின் அவலம் யாதெனில், ஓர் இனம் இன்னுமோர் இனத்தினை பரஸ்பர சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றது. ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி தனது மேலாதிக்கத்தினை நிலைநாட்ட எத்தனிக்கின்றது, ஓர் சமூகத்தின் கலாசாரத்தினை ஏற்க மறுக்கின்றது, ஓர் சமூகத்தின் சமய சம்பிரதாயங்களை ஏளனப்படுத்துகின்றது இவ்வாறு நீளுகின்ற எதிர்மறை இனத் தோற்றப்பாடுகளையும் இலங்கையின் பல்லினத் தன்மையையும் பன்மைத்துவத்தையும் புரிந்துகொள்ளாமலும் தான் 71 ஆவது சுதந்திர தினத்தை எதிர்கொண்டிருக்கின்றோம்.

சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் கலாசாரம் இந்நாட்டில் மக்களை பிளவுபடுத்தியமையானது ஆரோக்கியமானதல்ல. இந்நாட்டை மாறி மாறி ஆண்டுவரும் இரு பிரதான கட்சிகளும் இது தொடர்பான எந்தவோர் வேலைத்திட்டத்தினையும் இது வரையும் முன்னெடுத்த வரலாறு கிடையாது.

இலங்கைக்கான அரசியல் தீர்வென்பது பெரும்பான்மையினரை மாத்திரம் சந்தோஷப்படுத்துவதாகவோ அல்லது சகோதர தமிழ் மக்களின் அபிலாஷைகளை மாத்திரம் நிறைவு செய்வதாகவோ அமையவும் முடியாது. அவ்வாறான ஓர் அரசியல் தீர்வினை அங்கீகரிக்கவும் முடியாது.
இலங்கைக்கான அரசியல் தீர்வென்பது அனைவருக்குமான அரசியல் தீர்வாக அமைய வேண்டும். அந்த தீர்வுத் திட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகள் பேசப்பட வேண்டும். மலையகத் தமிழர்களின் அபிலாஷைகள் உள்வாங்கப்பட வேண்டும். அவ்வாறான அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வாகவும் அர்த்தபூர்வமான தீர்வாகவும் இருக்க முடியும்.

அரசியலமைப்பு வரைவானது அனைவருக்குமான அரசியல் தீர்வாக அமையவேண்டும். எந்தவோர் இனத்தினையும் அடிமைப்படுத்துகின்ற, எந்தவோர் இனத்திற்கும் முன்னுரிமை அளிக்கின்ற, மற்றுமோர் இனத்திற்கு அனுதாபமளிக்கின்ற, தனது கட்சி அரசியல் சார் வரைவாக வரையப்படலாகாது. எல்லா சமூகத்தின் உரிமைகளையும் தேவைகளையும் யாப்பு ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்வதே நிரந்தரத் தீர்வாக அமையும். எல்லா சமூகத்தவரும் அமைதியாக வாழும் நாடாக இலங்கையை எடுத்துக்காட்ட இச் சுதந்திர தினத்தில் உறுதிபூணுவோம்.

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

ஆசிரியன் எச்.எம்.ஹனீஸ்
03.02.2019

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...