sireku
தம்பலகமம் பிரதேச சபை தவிசாளராக சீனி முகம்மது சுபியான், பிரதித் தவிசாளராக அம்பகஹவத்தே சம்பிக பண்டார ஆகியோர் தெரிவானார்கள் . 

தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு வியாழக்கிழமை (12.04.2018) காலை 11.30 மணியளவில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜனாப் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. 

வட்டார அடிப்படையில் 10 பேரும் விகிதாசார அடிப்படையில் 06 பேருமாக 16 பேர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 03 பேரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 03 பேரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 03 பேரும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் 02 பேரும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 02 பேரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 02 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தெரிவாகியிருந்தனர். 

தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவுக்கான திறந்த வாக்கெடுப்பை மேற்கொள்வது என உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக சீனி முகம்மது சுபியான் அவர்களின் பெயரை ஹருன் தாலிப் அலி அவர்கள் முன்மொழிந்தார். அதனை முகம்மது இக்பால் றிகாஸ் அஹம்மது அவர்கள் வழிமொழிந்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மொஹம்மது யசீன் இமாம்தீன் அவர்களின் பெயரை அப்துல் ஹமீட் அப்துல் ரஹீம் அவர்கள் முன்மொழிய விஜயானந்தம் விஜயகுமார் அவர்கள் வழிமொழிந்தார். 

இதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சிறாஜ் நகர் வட்டாரத்தைச் சேர்ந்த சீனி முகம்மது சுபியான் அவர்கள் 08 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். பிரதித் தவிசாளராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் அம்பகஹவத்தே சம்பிக பண்டார அவர்கள் 08 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் திரு. இராசலிங்கம் பிரஹலாதன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எச்.எம்.ஹனீஸ்


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...