sireku
பாகிஸ்தானுடைய ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி ராஹீல் ஷரீப் அவர்கள், சவூதி அரேபியா தலைமையிலான 39 நாடுகளைக் கொண்ட சுன்னி நாடுகளின் கூட்டணிக்கு இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015 இல் சவூதி இளவரசரால் அதிரடியாக அறிவிக்கப்பட்டதிற்கிணங்க நடைமுறைக்கு வரும் செயற்பாடாக சுன்னி நாடுகளின் கூட்டணி பார்க்கப்படுகின்றது.
சிரியாவில் போராட்டத்தில் முன்னனி ஈடுபாடு காட்டிய துருக்கியும், அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தானும், தொழினுட்ப வல்லமை பெற்ற மலேசியாவும், பொருளாதார வல்லமை பெற்ற துபாயும் (UAE) இக்கூட்டணியில் இருப்பதுடன், சவூதி இதில் தலைமை வகிப்பதும், இராணுவ தந்திரங்களிலும், அனுபவத்திலும் முதிர்ந்த ராஹீல் இதில் நியமணம் ஒன்றை பெற்றிருப்பதும் இஸ்லாமிய உலகின் புதிய போக்கை ஆரோக்கியமாக நோக்க வைத்துள்ளது.
குறிப்பாக, கத்தார், சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய பொருளாதார பலம்மிக்க நாடுகள், இவற்றிற்கு நிதியுதவி செய்யவும், ராணுவ ஒத்துழைப்பையும் வழங்க எதிர்பார்த்துள்ளன.
பயங்கரவாதத்திற்கு எதிராக அதிரடியாக செயற்பட உருவாகியுள்ள இக்கூட்டணியில், ஈரான் உள்ளடங்களான எந்தவொரு ஷீயா ஆதரவு நாடுகளும் உள்வாங்கப்படவில்லை என்பதுடன், எதிர்கால திட்டங்கள் பற்றிய பாரிய ஆவலை அவதானிகள் முன்னிலையில் தோற்றுவித்துள்ளது.
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் பேசுகையில், இந்நியமணம் ஏலவே சில தினங்களுக்கு முன்னதான தெரிவு என்பதாக கூறியுள்ளார். பாகிஸ்தான் இராணுவ வரலாற்றில் 20 வருடங்கள் சேவையின் பின்னர் தனது பதவியை நீடித்து கேட்காத ஒருவராக ராஹீல் இடம்பிடித்துள்ளார்.
ராஹீலின் சக்திவாய்ந்த இராணுவ ஒத்துழைப்புடன், எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகள் சாத்தியப்படுமாயின், அது சக்திவாய்ந்த NATO நாடுகளின் கூட்டணிக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என்பதுடன், இஸ்லாமிய உலகின் இலக்குகளை செழிப்பாக்கும்.
ஆம், துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அளவிட முடியாத வளங்கள் இதனை துரிதமாக சாத்தியப்படுத்தும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
 – மீள்பார்வை சர்வதேச நிருபர் –