ரஷ்யாவின் தூதுவர் மீது துப்பாக்கி சூடு !
துருக்கிக்கான ரஷ்யாவின் தூதுவர் என்றி கர்லோவ் மீது துருக்கி, அங்காராவில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்காராவில் இடம்பெற்றுவரும் புகைப்படக் கண்காட்சியொன்றில் அவர் பங்கேற்ற நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவர் கடும் காயத்திற்குட்பட்ட நிலையில் மரணித்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்மாதம் 27 ஆம் திகதி கஸகஸ்தானில் நடைபெறவுள்ள சிரியா விவகாரம் தொடர்பான முத்தலைவர் மாநாட்டை குழப்புவதற்காகவும், அண்மைக்காலமாக துருக்கிக்கும், ரஷ்யாவுக்குமிடையில் உள்ள ராஜதந்திர நட்புறவை சீர்குழைத்து சிரியா பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் நோக்கத்தோடும் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதல் இடம்பெற்ற இடத்தில், தொடர்ந்தும் துப்பாக்கி சூட்டு சப்தங்கள் கேட்டதாகவும், பொலிஸ் அதிகாரி போன்று நடித்த ஒருவரே தாக்குதலை மேற்கொண்டிருப்பதாகவும், இத்தாக்குதலில் இன்னும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
“நாம் அலெப்போவில் மரணிக்கின்றோம், நீ இங்கு மரணித்துப் போ” “உன்னை கொல்லும்வரை நான் மரணிக்க மாட்டேன்” என்ற வாசகங்களை துப்பாக்கிதாரர் கூறியிருந்ததாகவும் அறியக் கிடைப்பதுடன், துருக்கி போலீசார் துப்பாக்கிதாரரியும் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பெறுகின்றன.
-மீள்பார்வை -
0 Comments