sireku

Abdul Muthalib Jafarullah
தம்பலகாமம் பிதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் கடந்த இரண்டு மாகாணசபை தேர்தல்களில் கிண்ணியா,மூதூர் மற்றும் புல்மோட்டை போன்ற பிரதேசங்களில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து அவர்களின் வெற்றிக்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ளார்கள்.அதன் பயனாக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக இன்றும் இருப்பது அனைவரும் அறிந்த விடயம்.

இது இவ்வாறிருக்க இதுவரை காலமும் ஏனைய பிரதேசங்களில் இருந்து வந்த வேட்பாளர்களை ஆதரித்த இப்பிரதேச மக்கள் சமகாலத்தில் தமது பிரதேசத்தில் இருந்து ஒரு மாகாணசபை உறுப்பினரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க தலைப்பட்டுள்ளார்கள். 

இதன் பிரதிபலிப்பு அப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களினதும் அரசியல்சார் முக்கியஸ்தர்களினதும் நேரடியானதும் சமூக வலைதலங்களினூடான பதிவுகளும் ஆதங்கங்களும் பறை சாற்றி நிற்கின்றன.

இதன் வெளிப்பாடு என்ன என்பதை சற்று ஆழமாக நோக்கினால் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தமது பிரதேசத்தில் இருந்து பிரதிநிதி தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற ஒரே கருத்து ஆழமாக பதிந்திருந்தாலும் சில கட்சி சார் வெறியர்களின் குறுகிய சிந்தனைகள் இம்மக்களின் அரசியல் தாகத்திற்கு ஆப்பு வைப்பதாகவே அமையப் போகிறது. 

அதாவது பிரதிநிதி ஒருவர் வருவதாயின் தான் சார்ந்து நிற்கும் கட்சிலேயே அவர் வர வேண்டும் என்ற இவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலை கருதாத சிறு பிள்ளைத்தனமான சிந்தனை நிச்சயமாக இந்த சமூகத்தின் வெற்றியிலும் இலட்சியத்திலும் பாரிய தாக்கத்தை செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இவர்களின் சின்னத்தனமான சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத சோம்பேறித்தனமான சமூகமாக தம்பலகாமம் முஸ்லிம் சமூகம் வாழ்வதயிட்டு வெட்கப்படுவதை தவிர் வேறொன்றும் செய்ய முடியாது.

இந்த விடயத்தில் ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றம் சொல்ல முடியாதாயினும் சமூகத்தில் அரசியல் ரீதியாக ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஆதரவாளர்களாக இருக்கும் முக்கியஸ்தர்களையே முழுமையாக சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. ஏனெனில் சமூகம் அரசியல் ரீதியாக அவர்கையே நம்பி இருக்கின்றது.தேர்தல் காலங்களில் கூட அவர்களின் அலோசனைகளுக்கமையவே தமது வாக்குகளை அளிக்கின்றனர்.

இவ்வாறு நம்பிக்கை வைத்துள்ள சமூகத்தை தமது சுயநலத்திற்காகவும் பிற தேவைகளுக்காகவும் தீர்க்கதரிசனமற்ற முறையில் பகடைக்காயாக பயன்படுத்த நினைப்பது கவலைக்குரியதும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.

சரியான நேரத்தில் சரியான முடிவை சமூகம் எடுத்தாலும் அவர்களை தவறான வழியில் செலுத்த முனைவது கட்சி சார் முக்கியஸ்தர்கள் இந்த அப்பாவி சமூகத்திற்கு செய்யும் மாபெரும் தவறு என்றால் அது மிகையாகாது.இந்நிலையில் இருந்து அவர்களாக மாறவேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.
தொடரும்.........

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...