sireku

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தை  சாதகமான முறையில் கையாள்வதற்கான  நடவடிக்கைகளில் புத்திஜீவிகள் இறங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

ஞாயிறு மாலை திருகோணமலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
 முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவை என்ற புரிதல் பலமட்டங்களிலும் சூடுபிடித்துள்ள ஒரு விவகாரமாகும். 

கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக எவ்விதமான சீர்திருத்தங்களுக்கும் உட்படாத ஒரு நிலையில் இச்சட்டம் காணப்படுகின்றமையை அவதானிக்கலாம். 

ஏனைய எல்லாச் சட்டங்களிலும் போன்று இச்சட்டத்திலும் மாற்றம் தேவை என்பதனை இலங்கை முஸ்லிம் சமுகத்தின் எந்த புத்திஜீவிகள்  தரப்பும் மறுக்கவில்லை. 

எனினும் அதற்கான சரியான பொறிமுறையை இனங்கண்டு கொள்ளவேண்டிய தேவை இலங்கை முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றமையை அவதானிக்கலாம்.

 இன்று குறித்த சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்பதனை வலியுறுத்தும் உள்ளக வெளியக தரப்பினரை எதிர்ப்பதில் கவனத்தை குவிப்பதற்குப் பதிலாக  இலங்கை முஸ்லிம் சமூகம் குறித்த சட்டத்தில் ஏற்படவேண்டிய மாற்றம் தொடர்பில் கவனத்தை குவிப்பதே காலத்தின் தேவையாகும். 

முன்பு போலன்றி இ சட்டத்துறையில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம் சட்ட அறிஞர்களும் நீதிபதிகளும் ஓய்வு பெற்ற நீதிபதிகளும் கடந்த 50 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இன்று கூடுதலாக இருப்பதால் இவ்வாறான சட்ட விவகாரங்கள் தொடர்பில் ஆர்வமுள்ள ஒவ்வொரு அமைப்பும்  இவ்வாறான துறைசார் நிபுணர்களைத் தம் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழுவினூடாக இதில் அவசியமான மாற்றங்களை  முறையான ஒழுங்கில் முன்னெடுக்கும் ஒரு பொறிமுறைக்கு வருவது இச்சட்டச் சீர்திருத்தத்தை மிக அழகாக எடுத்துச் செல்வதற்கான ஒரு முறையாக அமைய முடியும். 

மாற்றமாக  அனாவசிய இன முரண்பாடுகளுக்கு  வித்திடும்  வழிமுறைகளை கையாள்வதால் சமுகம்   மேலும்  பின்னடையும்  என்பதே எமது அச்சமாக உள்ளது.
எனவே புத்திஜீவிகள்  இந்த விவகாரத்தை  சாதகமான முறையில் கையாள்வதற்கான  நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.என தெரிவித்தார்

ஊடகப்பிரிவு