இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி திடீரென்று நிகழும் உடலியல் நிகழ்வுகளுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. ஆனால், இப்படி, கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

இருப்பினும் ஒருவர் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறுகிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டறிந்துள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்!

வெப்ப அளவுக்கும் கொட்டாவி ஏற்படுவதற்கும் இடையிலான இந்த தொடர்பு, கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதையே காட்டுகிறது.

ஒரு காலத்துக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்தது.

இம்முடிவின் அடிப்படையில், வெப்பமான நிலையானது அளவுக்கதிகமாக வெப்பமடைந்துவிட்ட மூளைக்கு ஒரு நிவாரணத்தை அளிப்பதில்லை. மாறாக, கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொட்டாவி ஏன் ஏற்படுகிறது? கொட்டாவியின் உயிரியல் பொருள் என்ன என்பது குறித்து ஒரு டசனுக்கும் மேலான ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு கருத்து இன்னும் எட்டப்படவில்லை.

உதாரணமாக, வெப்ப நெறிமுறை கோட்பாட்டின்படி மூளையின் வெப்ப அளவு அதிகரிக்கும்போது கொட்டாவி தூண்டப்பட்டு மூளையானது குளிர்விக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.

மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உஸ்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறது என்கிறார்கள்.
கொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வானது உதவியிருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஆண்ட்ரூ.

மேலும், மிக அதிகமான எண்ணிக்கையில் கொட்டாவி விடுவதை, உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதா என்பதை கண்டறிய உதவும் ஒரு முன்பரிசோதனையாகக் கூட எடுத்துக்கொள்ளலாம் என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் நிபுணர்கள்.