sireku

ஓரு நாட்டின் வரலாற்றுண்மைகளையும், பண்பாட்டுச் செய்திகளையும் புதைபொருட்களும், கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், நாணயங்களும், மட்பாண்டங்களும், இலக்கியங்களும் எடுத்துச் சொல்வது போன்று, இடப்பெயர்களும் வரலாற்று ஆய்வுக்கு உறுதுணை செய்கின்றன. 

இலங்கையில் “காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடபெயர்களை ஆராய்கையில் அவை வரலாற்றுக்காலம் முதல் தமிழர் வாழ்ந்த பிரதேசங்கள் முழுவதும் பரவி இருந்ததைக் காணக்கூடியதாக உள்ளது.

மாவட்டரீதியில் அவ்விடப்பெயர்கள் வருமாறு.

யாழ்ப்பாண மாவட்டம் - கொடிகாமம், தம்பகாமம், வலிகாமம், வீமன்காமம்
முல்லைத்தீவு மாவட்டம் – பனங்காமம்
அம்பாறை மாவட்டம் - இறக்காமம் (ஏறுகமம் )
மட்டக்களப்பு மாவட்டம் – பழுகாமம்
மொனராகலை மாவட்டம் - கதிர்காமம்
பொலநறுவை மாவட்டம் - சந்தணகாமம் (இன்றைய கல்லோயா)
திருகோணமலை மாவட்டம் - தம்பலகாமம், உரகிரிகாமம், கிரிகண்டகாமம், மேன்காமம்
மன்னார் மாவட்டம் – வலிக்காமம், முதலியான்காமம்
அனுராதபுரம் மாவட்டம் - அனுராதகாமம் (பழைய பெயர்),கணகாமம்

சில இடப்பெயர்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வந்ததை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. வரலாற்றில் இடப்பெயர்கள் மாற்றமைடைந்து வந்தமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 

அரசர்கள் தாங்கள் வெற்றிகொண்ட பிரதேசங்களின் பெயர்களை மாற்றியமை, ஆட்சியாளர்கள் தங்களால் தானமாக பிறருக்கு வழங்கப்பபட்ட ஊர்களின் பெயர்களை மாற்றியமை, அறிஞர்களால் அரசியல்,மொழி,கலாச்சாரப் பின்னணியில் மாற்றியமைக்கப்பட்ட இடப்பெயர்கள் என்பன அவற்றுள் சிலவாகும்.

எனினும் காமம் ,கிராமம் என்ற இலங்கைத் தமிழர் இடபெயர்  சொல் சமக்கிருத '(g)கிராம" என்ற சொல்லிலிருந்து உருவானது என்ற வாதம் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சமக்கிருத காமா என்பதே சிங்களத்திலும்(கம,கமுவ) ,பாலி போன்ற பரகத மொழிகளிலும் பொதுவான வேர் கொண்ட சொல்லாகத் திகழ்கின்றது என்பது இதற்கு வலுச்சேற்கும் கருத்தாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் மொழியியல் அறிஞர்கள் காமம் என்ற திராவிடச்சொல் தமிழில் இருந்து வடசொல் ஆனது என்பர்.

 "கமம் நிறைந்து இயலும்" என்றார் தொல்காப்பியர் (தொல். சொல். உரி. 355)

கமம் என்ற சொல்லுக்கு பொருள் நிறைவு என்பதாகும் . கமம் என்ற சொல்லே காமம் என்றானது. 

சங்கத் தொடரில் வரும் " கமஞ் சூல் மாமழை " என்பதற்கு சூல்நிறைந்த முகில் என்பதே பொருள். அதோடு அன்பின் நிறைவையே காமம் என்று பழந்தமிழர்கள் அழைத்தனர். காமம் மிக்க கழிபடர் கிளவி என்று தூது இலக்கியம் அதைத்தான் சொல்கிறது.

நிறைவு எனப் பொருள்பட்ட இந்தக் கமம், மக்கள் நெருங்கி வாழும் ( உறு - ஊர் போல் ) இடத்தினைக் குறிக்க பொருள் விரிவு பெற்று காமம் ஆனது என்பர். கமம் என்றசொல் பயிர்செய்கை நிலத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

காமம்¹ kāmam (அக. நி.) 1. Village; ஊர். 2. Inhabitant; குடி.

பிரதேசங்களில் வழக்கில் இருக்கும் “காமம்” என்னும் ஈற்றுப்பெயர்  கொண்டமைந்த இடப்பெயர்கள் ஊர் என்ற பொருள்படவே அமைந்திருக்கிறது எனலாம்.

நன்றி: geevanathy.