sireku

தற்போது நாட்டில் நிலவும் இந்த நிம்மதியான சூழல் தொடர மலரும் இந்தப் பெருநாள் தினத்தில் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கிறீஸ்மனிதன், பள்ளிவாயல்கள் உடைப்பு, காணிகள் ஆக்கிரமிப்பு, தொழில் தடைகள் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் முகங்கொடுத்து வந்தோம். எனினும், இப்போது இந்தச் சூழ்நிலை இல்லாது நிம்மதியான சூழலில் வாழ்ந்து வருகின்றோம். இந்த நிலை தொடர வேண்டும். அதற்காக நாம் அனைவரும் இந்த நந்நாளில் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.

புனித ரமழான் காலத்தில் அதிக நன்மைகளை நாம் உழைத்திருக்கிறோம். பொறுமை. நேர்மை, பிறருக்கு உதவும் பண்பு என்பனவற்றை வாழ்வில் கடைப்பிடித்திருக்கிறோம். இந்நிலை நமது வாழ்நாளில் தொடர வேண்டும். அதன் மூலம் நமது மறுமை வாழ்வு சிறப்பானதாக அமைய வேண்டும்.

பொதுவாக தேர்தல் காலம் என்றால் அடுத்தவரை பற்றி அதிகம் புறம் பேசும் காலம் என்ற நிலை இப்போது ஏற்பட்டு விட்டது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை நரகிற்கு இட்டுச் செல்கின்ற முக்கிய பாவங்களில் ஒன்றாக இது இருக்கின்றது. எனவே, இந்த விசயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் நமது நாவைக் கட்டுப்படுத்தி நல்ல பேணுதலோடு செயற்பட்டு நமது நன்மைகளைப் பாதுகாத்து ஈருலகிலும் சந்தோசமாக வாழ வேண்டும். அதற்கான வாய்ப்பை நம் அனைவரும் வல்ல நாயன் தர வேண்டும் என இந்நாளில் அனைவரும் பிரார்த்திப்போமாக.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...