தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் நான் கொலை செய்யப்பட்டிருப்பேன் - ஜனாதிபதி
sireku
ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியடைந்திருந்தால், முன்னைய அரசாங்கம் தன்னை கொலைக்கூட செய்திருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தனக்கு பலவிதமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் நான் தோல்வியடைந்திருந்தால்,தற்போது 6 அடி நில குழியில் இருந்து இருப்பேன்.
தேர்தலில் நான் தோல்வியடைந்தால், எனது பிள்ளைகளை கைது செய்து சித்திரவதை செய்யவும் மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றிபெற்று மூன்று வாரங்களின் பின் முதல் முறையாக ஜனாதிபதி தனது சொந்த மாவட்டமான பொலன்நறுவைக்கு சென்றுள்ளார்.
ஊழல் நிர்வாகத்தை நிறைவுக்கு செய்த பெருமை மக்களையே சாரும்: ஜனாதிபதி
ஊழல் நிர்வாகத்தை நிறைவுக்கு கொண்டு வந்து சிறந்த நிர்வாகத்தை கொண்டுச் செல்லும் கௌரவம் நாட்டின் சகல மக்களையும் சாரும் என புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரியின் ஜனஹிந்தன விழா பொலன்னறுவையில் நேற்று இடம் பெற்றது. தோப்பாவெவ மற்றும் ஹிங்குரக்கொட டட்லி சேனாநாயக்க மைதானங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகத்தின் சகல அரசியல் தலைவர்களின் கருத்தையும் வெற்றிக்கொண்ட அரசில் கலாசாரம் ஒன்றை அறிமுகம் செய்ய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக, இதுவரையில் எந்த அரசாங்கமும் நாட்டு மக்களுக்கு வழங்காத பல நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், மக்களை துன்பத்தில் இருந்து மீட்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
0 Comments