sireku

-அபூபக்கர் றமீஸ் 
சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் 
தென் கிழக்கு பல்கலைக்கழகம்-

இராணுவ முஸ்தீபுக்கு கடைசி வரை போராடி, அது முடியாமல் போனதால் அலறி மாளிகையை விட்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் முன்னால் ஜனாதிபதிக்கு ஏற்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், அவர் மெதமுலானைக்கு சென்றவுடன் பேசிய பேச்சு இனவாதத்தை இன்னும் மெருகூட்டி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதை ஒரு முதலீடாக பயன்படுத்துவதற்கு அல்லது நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்த சதித்திட்டத்தை தீட்டுகிறாரோ என என்ன தூண்டுகிறது. அவர் அங்கு பேசுகையில், 

" வட கிழக்கிலுள்ள தமிழர்களும், முஸ்லிம்களும், மலையகத்தவர்களுமே என்னை தோற்கடித்தார்கள் என்றார்"

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்ற 62 இலட்சம் வாக்குகளில் மேலுள்ள இனத்தவர்களின் வாக்குகள் கிட்டத்தட்ட 12 இலட்சம் ஆகும். மீதமுள்ள  50 இலட்சம் வாக்குகளும் பெரும்பான்மை சிங்கள மக்களால் அளிக்கப்பட்டவை. 

அம்மக்களும் நாட்டில் நல்லாட்சி, ஜனநாயகம் மேலோங்கவும், குடும்பவாட்சிக்கு எதிராகவும்,  இலஞ்ச, ஊழலை முடிவுக்கு கொண்டு வரவும், நாட்டில் ஒரு மாற்றத்தை வேண்டி நின்றே வாக்களித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. 

யதார்த்தம் இவ்வாறு இருக்கத்தக்கதாக, தமிழ், முஸ்லிம், மலையக தமிழர்களே என்னை தோற்கடித்தார்கள் என்று முன்னால் ஜனாதிபதி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படுவதன் நோக்கம் என்ன? நாம் ஏலவே குறிப்பிட்ட படி, இவ்வாறான நச்சு கருத்துக்களை ஒன்றில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான முதலீடாக்க முயற்சிக்க வேண்டும் அல்லது நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் சதித்திட்டமாக இருக்க வேண்டும் என்பதே நமது கணிப்பீடாகும். 

ஆகவே, ஜனாதிபதி மைத்திரி அவர்களை வெற்றியடைய செய்ததில் சிறுபான்மை மக்களுக்கு அளப்பெரிய பங்கு இருக்கிறது. அதை மறைக்கவே, மறுக்கவே முடியாது. ஆனால், அதை வைத்து நாம் தம்பட்டம் அடிக்க முற்படுவது, இனவாத அரசியல்வாதிகள் தென்னிலங்கையில் அதை ஒரு முதலீடாக பாவிக்க முற்படுவார்கள் என்பதே திண்ணமாகும். 
  jaffnamuslim