sireku



ஜனாதிபதித் தேர்தலை பிற்போட அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலருடன் ஜனாதிபதி ஆலோசனையொன்றை நடத்தியுள்ளார் என்றும் அலரிமாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள நிலையில் அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தி, அமைச்சர்களின் கட்சித் தாவல் நிலைப்பாடுகள் என்பன தொடர்பில் ஜனாதிபதி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதே நிலையில் ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கும் போது அரசாங்கத்தின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விடும் என்பது உளவுத் துறையின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் ஜனவரியில் இடம்பெறவுள்ள புனித பாப்பரசரின் விஜயமும் ஜனாதிபதித் தேர்தல் தினத்தைப் பொறுத்தே உறுதிப்படுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக தேர்தலைப் பிற்போட்டு, பாப்பரசரின் வருகையை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வற்புறுத்தியுள்ளார்.
மறுபுறத்தில் அதுரலியே ரத்ன தேரர் மூலமாக எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகளும் எதிர்பார்த்தளவுக்கு கைகூடவில்லை.
இதுவும் போதாதற்கு எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஜீவகாருண்ய அமைப்பொன்றின் மூலமாக அவரது மகன் விமுக்தியை பொதுவாழ்விற்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளார்.
சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் அதற்கான அடித்தளம் இடப்பட்டபோதும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் விமுக்திக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர்.
எனவே இவற்றைக்கருத்திற் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை பிற்போட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என்பதே இப்போதைக்குள்ள மேலதிக தகவலாகும்.
எனினும் புனித பாப்பரசரின் வருகை ,வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் போன்ற கவசங்களை முன்வைத்து தேர்தலை பிற்போடும் திட்டத்தில் அரசாங்கம் உள்ளது.
இதன் மூலம் கிறித்தவர்களின் அமோக ஆதரவையும் பெற்றுக் கொள்ளலாம் என்று ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாகவும் எதிர்வரும் வாரங்களில் மேல்முறையீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது, அதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய சட்டவல்லுனர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் அவர்களைத் தடைசெய்துவிட முடியும் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனையும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்குச் சாதகமான பிரச்சாரமாக பயன்படுத்திக் கொள்ளவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்படுவது தொண்ணூறு வீதம் உறுதி என்றும் அதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் அலரி மாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி :puttalamtoday.com