sireku

Gaza attakநேற்றிரவு (சனிக்கிழமை) ஹமாஸ் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மீது கடகடவென ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. பிளாங்கெட் மிசைல் முறையில் இத்தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எந்தவொரு இலக்கையும் குறிவைக்காமல், கடகடவென அடுத்தடுத்து ஒரு நகரத்தின் வெவ்வேறு பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை ஏவுவதே பிளாங்கெட் மிசைல் எனப்படும்.
இதில் மற்றொரு விடயம் என்னவென்றால், பிளாங்கெட் மிசைல் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலுக்கு 1 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. இஸ்ரேலியர்களின் ஹீப்ரூ மொழியில் டைப் செய்யப்பட்ட எச்சரிக்கை ஒன்று ஹமாஸ் இயக்கத்திடம் இருந்து இஸ்ரேலிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், “இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தில், டெல்அவிவ் நகரம் மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளை நோக்கி எமது பெரிய தாக்குதல் ஒன்றை எதிர்பாருங்கள்” என எழுதப்பட்டிருந்தது.
உடனே இஸ்ரேலில் அவசர கதியில் காரியங்கள் நடக்க தொடங்கின. நகர்முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏவுகணை தடுப்பு சாதனமான Iron Dome batteries தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி ஹமாஸ் எச்சரித்தது போல சரியாக 1 மணி நேரத்தில் காஸா பகுதியிலிருந்து ஏவுகணைகள் கடகடவென சீறிக்கொண்டு குறித்த இடங்களைத் தாக்கியது.
டெல்அவிவ் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஓய்ந்து சுமார் அரை மணி நேரத்தில், இருளை போர்வையாக கொண்டு இஸ்ரேலிய அதிரடிப்படை ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதிக்குள் வந்தது.
7 நாட்களாக நடைபெற்றுவரும் இந்த யுத்தத்தில் இஸ்ரேல் தமது விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் இயக்கம் ரொக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இருதரப்பும் எல்லைகடந்து எதிர்த்தரப்பின் பகுதிக்குள் சென்றதில்லை.
ஆனால், நேற்றிரவு முதல் இஸ்ரேலிய இராணுவம் எல்லை கடந்து காஸாவுக்குள் ஊடுருவியுள்ளது. காஸாவின் வடக்குப் பகுதி வழியாக இஸ்ரேலின் கடற்படை வீரர்களே இங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்பின்னர் ஹமாஸ் இயக்கத்துக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையிலான தாக்குதலின்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலிலின்போது தங்களுடைய படையினர் 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.