பதவி இராஜினாமா கடிதத்தை நாளை கையளிக்கவுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும.
sireku
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் தமது இராஜினாமா கடிதத்தினை நாளை கட்சித் தலைவரிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும தெரிவிக்கின்றார்.
அளுத்கம சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்காத காரணத்தினால், இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
அளுத்கம, பேருவளை – தர்கா நகர் பகுதியில் கடந்த 15ஆம் திகதி அனுமதியின்றி நடத்தப்பட்ட கூட்டமொன்றினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு பொலிஸ் திணைக்களத்திற்கு இருக்கின்றது. அமைதியையும், சமாதானத்தையும் அவர்கள் நிலைநாட்ட வேண்டும். எவ்வாறாயினும், அன்றையதினம் பொதுமக்களை அவர்களால் பாதுகாக்க முடியாது போயுள்ளது. வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகள் என அனைத்தும் சேதமாக்கப்பட்டன. அவை சேதமாக்கப்பட்ட போதிலும், பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதிருந்தனர். சீருடை அணிந்த பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கு முன்னால் இவை இடம்பெற்றன. எனவே இதற்கு பொலிஸ் திணைக்களம் பொறுப்புக் கூறவேண்டும். விசாரணைகள் நிறைவடையவில்லை, அவர்களை கைதுசெய்துள்ளோம், இவர்களை கைது செய்துள்ளோம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு பொலிஸ் திணைக்களமும், பொலிஸ் மாஅதிபரும் பொறுப்பு கூற வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடின், பதவி விலகுவதாக தெரிவித்தேன். கட்சித் தலைவரை நாளை சந்தித்து, எனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளேன். நான் தெரிவித்த கருத்தை நிறைவேற்றியுள்ளேன். பொலிஸ் மாஅதிபர் அவரது பொறுப்பை உரியமுறையில் நிறைவேற்ற வேண்டும். (newsfirst)
0 Comments