தர்காநகரில் கைது செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
sireku
தர்காநகரில் பெளத்த மதகுருவொருவர் அச்சுறுத்தப்பட்டும், அவரது சாரதி தாக்கப்பட்டதுமாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞரை விடுவிக்கக் கோரி, தற்போது அங்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் காலி வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருப்பதாகத் தெரிவிக்கும் பொலிஸார், வாகன சாரதிகளுக்கு மாற்று வழிகளைக் கையாளும்படி கேட்டுக்கொள்கின்றனர்.
தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பில் குறித்த மதகுருவுக்கும், முஸ்லிம் நபரொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையே தற்போதைய பதற்ற நிலைக்குக் காரணம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அளுத்கம பொலிஸ் நிலையத்தைச் சுற்றியும் பிரதேசவாசிகள் குமிந்துள்ளனர்.
இந்நிலையில், மதகுருவைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் தலைமறைவாகியிருந்து பின் கைது செய்யப்பட்டிருக்கிறார். இச்சந்தேக நபர் தலைமறைவாகயிருந்த நேரம் பொலிஸார் அவரது சகோதரரைக் கைது செய்ததிலேயே பதற்றம் உக்கிரம் பெற்றிருக்கிறது.
சந்தேக நபர் குற்றவாளியாகக் காணப்படும் பட்சத்தில் அவர் தண்டிக்கப்படுவதில் நியாயமிருக்கின்றது எனத் தெரிவிக்கும் அப்பிரதேச முஸ்லிம் பிரமுகர்கள், இது பிற இனத்தவரையோ மதத்தவரையோ நிந்திக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதல்ல என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.
இன முறுகல்கள் ஏற்படாத இருதரப்பு சுமுக பேச்சுவார்த்தைகளுக்கும் முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் முயன்று கொண்டிருப்பதாக அறியக் கிடைக்கிறது. (ரி) (daily Ceylon)
0 Comments