அளுத்கம பதற்றம்: மேலதிக தகவல்கள்
sireku
பெளத்த துறவியொருவர் தாக்கப்பட்டதாகவும் தாக்கியவர் கைது செய்யப்படத் தாமதமாவதாகவும் கூறி இன்று நண்பகல் அளுத்கம பொலிஸ் நிலையம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில் அச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
தர்கா நகர், விஜயராம விஹாரையைச் சேர்ந்த சமித ஹிமி என அறியப்படும் பெளத்த துறவியொருவா் தான் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டதையடுத்தே இவ்வாறு பதற்றம் தோன்றியுள்ளதாக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
அதேவேளை, சம்பவம் பற்றி பிரதேசவாசிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், இன்று பொசன் தினமாக இருப்பதனால் வாகன நெரிசல் அதிகமாக இருந்ததாகவும் விஹாரை அமைந்திருக்கும் பஹதகொட பிரதேச பாதையில் வாகன நெரிசலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் குறித்த பிக்கு அமர்ந்திருந்த வாகன சாரதி முன்னால் நின்றிருந்த ஆட்டோவில் பயணித்தவர்களை அணுகி வழிவிடக் கோரிய அதேவேளை தவறான முறையில் பேச முனைந்ததனால் கோபமடைந்த இரு முஸ்லிம் இளைஞர்களே இவ்வாறு துறவியின் சாரதியை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பெளத்த துறவி தானும் தாக்கப்பட்டதாகக் கூறியிருக்கும் அதேவேளை அவர் தாக்கப்படவில்லை என இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், பிரதேசத்தில் எழுந்த பதட்டத்தை தனிக்குமுகமாக குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கமவின் வாகனம் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கல் வீசி சேதமுண்டாக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பதற்றம் காரணமாக அளுத்கம பகுதியில் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பிரதேசத்தின் சமூக பிரமுகர்கள், அரசியல் பிரதிநிதிகள் அவரவர் மட்டத்தில் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் அறியமுடிகிறது.
0 Comments