ரஷ்யாவுடனான உறவினை முறித்தது நேட்டோ.
sireku
உக்ரைனின் கிரிமியா விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சுமார் 4 மணிநேரம் நீடித்த ரஷ்ய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் உக்ரைனின் எல்லை மற்றும் கிரிமியாவில் இருந்து ரஷ்யப் படைகளை விலக்கிக் கொள்ளப் பல ஆலோசனைகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி முன்வைத்த போதும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அவற்றுக்கு உடன்பட்டு எத்தகைய உறுதிமொழியும் அளிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவுடனான சிவில் மற்றும் இராணுவ கூட்டுறவைப் பகிஷ்கரிப்பதாக நேட்டோ அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து நேட்டோ தலைமை இராணுவத் தளபதி கூறுகையில் உக்ரைனின் எல்லைப் பகுதியில் இருந்து தனது படைகளை ரஷ்யா திரும்பப் பெறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படாததால் இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நேட்டோ அமைப்பைச் சேர்ந்த சுமார் 28 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இன்று செவ்வாய்க்கிழமை புருஸ்ஸெல்ஸில் ஒன்றாகச் சந்தித்து இம்முடிவை எடுத்தனர். இது போன்ற பாரதூரமான முடிவு இதற்கு முன்னர் பனி யுத்தத்தின் (Cold war) போது மட்டுமே எடுக்கப் பட்டிருந்தது. மேலும் இந்தத் திடீர் முடிவு ஆப்கானிஸ்தானில் தற்போது முகாமிட்டிருக்கு நேட்டோவின் முக்கிய பராமரிப்புப் பணிகளைப் பாதிக்க வல்லது எனவும் நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உக்ரைனின் தலைநகர் கியேவி இல் இருந்து செயற்படும் அந்நாட்டு அரச நிர்வாகம் நேட்டோவுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்க்கத் துணிந்தால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
0 Comments