sireku



இலங்கையை எந்த பூதங்கள் ஆட்சி செய்கின்றது என்பது புரியவில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிருளைப்பனையில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு சுற்றாடல் ரீதியாகவும், தொல்பொருள் ரீதியாகவும் பாதுகாப்பு தொடர்பில் முக்கியமான பகுதியாக இருக்கும் வில்பத்து வனத்தை அழித்து மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தை நிறுத்த ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுபல சேனா அந்த பிரதேசத்திற்கு செல்ல நேரிடும்.

இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பல முறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் எவ்விதமான பதிலும் வழங்கப்படவில்லை.

இந்த நாட்டை எந்த பூதங்கள் ஆட்சி செய்கின்றன என்பது புரியவில்லை. அமைச்சர்கள் தாம் விரும்பியவாறு செயற்படுகின்றனர். நாங்கள் அரசாங்கத்தை காப்பதற்காக செயற்படவில்லை.

முதலில் எமது நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும். எமது உரிமைகளை கொள்ளையிட முஸ்லிம்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது யார்?.
விடுதலைப் புலிகள் கூட வில்பத்து வனத்திற்கு இவ்வாறான அநியாயத்தை செய்யவில்லை. அதனை விட பல நூறாயிரம் மடங்கு அழிவை மேற்கொண்டு வில்பத்து வனத்தை அழித்து வருகின்றனர்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் அம்பாறையில் புராதன விகாரை ஒன்றை புனரமைப்பதற்கான அடிக்கல்லை நாட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள் இடமளிக்கவில்லை.

சிங்களவர்களின் முதுகெலும்பை முறிப்பதற்கு மட்டுமா நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது என ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.