sireku



ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' படைகளின் ஆதரவில் அகற்றப்பட்டு தற்போது அதிபர் கர்சாய் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. பாதுகாப்புக்கு நேட்டோ படைகள் முகாமிட்டு இருந்தாலும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

'நேட்டோ' படைகளின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே 10 ஆண்டுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அமெரிக்கா படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாபஸ் பெறப்பட உள்ளது.


இத்தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்கனவே அறிவித்தார். இருந்தாலும், இன்னும் சில குறிப்பிட்ட காலம் குறைந்த அளவிலான அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்க அவர் விரும்புகிறார்.


ஆனால், பொது மக்கள் மற்றும் தலிபான்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ளதால் இதற்கு அதிபர் கர்சாய் மறுத்துவிட்டார். இதற்கிடையே வருகிற ஏப்ரல் 5–ந்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடக்கிறது.

அதில் தலிபான்களையும் பங்கேற்க செய்து நாட்டில் அமைதி ஏற்படுத்த கர்சாய் விரும்புகிறார். அதற்காக தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆப்கானிஸ்தான் அமைதி உயர்மட்ட கவுன்சில் அமைத்தார்.


இந்த கவுன்சில் மூலம் துபாயில் கடந்த 3 வாரத்துக்கு முன்பு தலிபான்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் அரசு அதிகாரிகளும், தலிபான் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அதில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டதா? என தெரியவில்லை. பேச்சுவார்த்தையின் முடிவுக்காக அதிபர் கர்சாய் காத்திருக்கிறார்.