sireku


குற்றமிழைத்தவர்களே குற்றத்தை விசாரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும், சர்வதேச விசாரணையின் மூலமாகவே தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்குமெனவும் தான் எதிர்பார்ப்பதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


இலங்கை அரசின் உள்ளக பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லை என்றும் அரச சார்பில் இராணுவத்தினரே விசாரணைகளை மேற்கொள்வர் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


எனவே குற்றமிழைத்தவர்களே குற்றத்தை விசாரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஆசிய தமிழ்த் தேசத்தின் மீதான இன அழிப்பிற்கு நம்பகரமான சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென இலங்கை வந்த அமெரிக்க குழுவினரிடம் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

பசுபிக் மத்திய நாடுகளின் விவகாரங்களுக்கான செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டு யாழ் ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது யாழ். ஆயர் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளே. இந்த இன அழிப்பினை செய்பவர்களே இதனை விசாரணை செய்வதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

இங்கு போரில் புலிகளை வெற்றி பெற்றுள்ளதாக உள்நாட்டிலும் உலக அரங்கிலும் பறை சாற்றுகின்ற இலங்கை அரசு போரிற்குப் பின்னரான தற்போதைய நிலையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இதனை விடுத்து தற்போதும் போர் வெற்றியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இங்கு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையோ அல்லது சமாதானத்தையோ ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.

அத்தோடு ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள அமெரிக்க பிரேரணையில் குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான விடயம் உள்வாங்கப்பட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆகவே இதற்கமைய சர்வதேசம் நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவதன் மூலமாகவே தமிழ் மக்கள் இங்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடியதாக இருக்கும் என யாழ். ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.