ஷரிஆ சட்டத்தை கடைப்பிடிக்க லிபிய பாராளுமன்றத்தில் தீர்மானம்

ஷரிஆ அல்லது இஸ்லாமிய சட்டமே நாட்டின் அனைத்து சட்டங்கள் மற்றும் அரச நிறுவனங்களினதும் அடிப்படையாக இருக்கும் என லிபிய பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. லிபியாவில் கடும் போக்கு பழைமைவாத ஆயுததாரிகளின் செல்வாக்கிற்கு எதிராக மிதவாத இஸ்லாமிய வாதிகள் தங்களை வலுப்படுத்தும் வெளிப்படை முயற்சியாக இது கருதப்படுகிறது.


நேட்டோ படைகளின் ஆதரவுடனான மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசு கவிழ்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதும் லிபியாவில் ஆட்சி மாற்ற செயற்பாடுகள் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருகிறது.
நாட்டில் தற்காலிக அரசொன்றே நீடிப்பதோடு புதிய அரசியலமைப்பு இன்னும் வரையப்படவில்லை.

ஆயுதக் குழுக்கள் மற்றும் முன்னாள் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாட்டில் எவ்வாறு பாதிப்பைச் செலுத்தும் என உடனடியாக தெரியவில்லை என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது நாட்டின் குற்றவியல் மற்றும் வர்த்தக சட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. “சட்ட முறையில் பல சட்டங்களும் இஸ்லாமிய சட்டத்துடன் முரண்படாத வையாகவே காணப்படுகின்றன.

எனவே ஷரிஆ சட்டமே ஒரே ஆதாரமாக இருக்கும் என்பதை இலகுவாக கூறிவிட முடியும்” என்று தேசிய படைகளின் கூட்டணி கட்சி உறுப்பினர் இப்ராஹிம் அல் கர்யானி குறிப்பிட்டார்.

எனினும் சட்டவாக்க உறுப்பினர்களின் இந்த பாராளுமன்ற தீர்மானத்தின் பின்னணியில் அரசியலும் இருப்பதாக நம்பப்படுகிறது.

துனீஷியா, எகிப்தைப் போன்று அரபு வசந்தத்தின் மூலம் லிபியாவிலும் சர்வாதிகார தலைவர் பதவி கவிழ்க்கப்பட்ட போதும் லிபியாவில் தனது புதிய ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் பங்கு பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. இதில் கடாபி ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருந்த பழைமைவாத இஸ்லாமியவாதிகள் எழுச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு பெங்காசியில் இருக்கும் அமெரிக்க துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக குற்றம்சாட்டப்படும் அன்சார் அல் ஷரிஆ குழு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இஸ்லாம் அல்லாதோர் என குற்றம்சாட்டியிருந்தது. இந்த ஆயுதக் குழு நாட்டின் கிழக்கு பகுதியில் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டது.

“இந்த தீர்மானம் பாராளுமன்றம் ஷரிஆ சட்டத்துடன் இணைந்து செயற்படவில்லை என கூறுவோரது இடைவெளியை நிரப்புவதாகும்” என்று லிபிய முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சியான நீதிக்கும் கட்டுமானத்துக்குமான கட்சியைச் சேர்ந்த மொஹமட் அல் சரூக் கூறுகிறார்.

லிபியாவின் புதிய அரசியலமைப்பை வரையும் விசேட குழு ஷரிஆ சட்டத்தை கடைப்பிடிப்பதை கட்டாயப்படுத்தும் வகையிலேயே பாராளுமன்றம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது. மேற்கின் வரையறுக்கப் பட்ட சட்டம் போலல்லாமல் ஷரிஆ, புனித குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மத் நபியின் சொல், செயல், அங்கீகாரம் மற்றும் முஸ்லிம் சம்பிரதாயங்களை கொண்டதாக இருக்கும்.

லிபியா தனது புதிய அரசியல மைப்பை வரைவதற்கான 60 பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு முன்னரே அந்நாட்டு பாராளுமன்றம் நாட்டின் அனைத்து விடயங்களும் ஷரிஆ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.