தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஜொஹன்னஸ் பேர்க் நகரிலுள்ள எப்.என்.பி.மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது பல்லாயிரக்கணக்கானவர்கள் மறைந்த மாபெரும் தலைவருக்கு தமது மரியாதையை செலுத்தும் நோக்கில் அங்கு கூடியிருந்தனர்.
இதன் போது சில உலகத் தலைவர்கள் மறைந்த மாபெரும் தலைவர் ஒருவருக்கு தாம் அஞ்சலி செலுத்துவதற்கு தாம் வந்துள்ளதை மறந்தது போன்று சக தலைவர்களுடன் இணைந்து தம்மை கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்படமெடுப்பதற்காக வாய்ப்பாக அந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஞ்சலி நிகழ்வின் போது மைதானத்தில் அருகருகே அமர்ந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோனும் டென்மார்க் தலைவர் ஹெல்லி தோர்னிங் ஸ்கமிட்டும் சிரித்தவாறு கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்பட எடுத்துக் கொண்டமையானது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மேற்படி 3 தலைவர்களும் கையடக்கத் தொலைபேசி புகைப்படத்தை எடுத்துக் கொண்ட போது தமது கணவரின் அருகில் அமர்ந்திருந்த மிசெல் ஒபாமா, அவர்களது செயலால் ஈர்க்கப்படாதவர் போன்று மைதானத்தை நோக்கி தனது பார்வையை திருப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமரும் டென்மார்க் பெண் தலைவருமான ஹெல்லியும் சிரித்தவாறு தம்மைத் தாமே புகைப்படமெடுத்துக் கொள்வதையும் பராக் ஒபாமாவும் ஹெல்லியும் நிலைமைக்கு சிறிதும் பொருந்தாத வகையில் சிரித்தவாறு உரையாடுவதையும் வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பலரும் அவர்களது செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இன ஒடுக்கு முறைக்காக போராடி மரணமான மாபெரும் தலைவரின் வாழ்க்கையை நினைவுகூரும் நிகழ்வில் மேற்படி 3 தலைவர்களும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
0 Comments