sireku

ஆட்சியை கைப்பற்ற சதி செய்ததால்

மாமாவுக்கு தூக்கு தண்டனை வடகொரியா அதிபர் கிம் அதிரடி.


சியோல் : வடகொரியாவில் ஆட்சிக்கு எதிராக துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அதிபர் கிம்மின் சொந்த மாமா, ஜாங் சாங் தெக் தூக்கிலிடப்பட்டார். வடகொரியாவில் கடந்த 2011 ல் இருந்து அதிபர் கிம் ஜோங்-யின் (30) தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபர் கிம் குடும்பம் கடந்த 60 ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்துவருகிறது. தந்தை கிம் ஜோங்-யில் மறைவுக்கு பிறகு, அதிபர் பதவியேற்ற கிம் ஜோங்-யின்னுக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்து ஆட்சியை ஸ்திரப்படுத்தியவர் அவரது மாமா ஜாங் சாங்-தெக்.

ஜோங்-யில் சகோதரியை மணந்த 67 வயதான இவர் ஜோங்-யில் ஆட்சியிலும், ஜோங்-யின் ஆட்சியிலும் நம்பர் 2வாக திகழ்ந்தவர். அவர்மீது ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாக கூறி கைது செய்தார் அதிபர் கிம்.அதிபரின் நம்பிக்கைக்கு உரிய நபராக இருந்துகொண்டு, அதிபருக்கு எதிராக ஆட்களை தூண்டி ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டார் என்றும், மேலும் கட்சியின் பணத்தில் வெளிநாடுகளுக்கு சென்று உல்லாசமாக பொழுதுபோக்கினார் என்றும் அவர்மேல் குற்றம் சாட்டப்பட்டது.

 தனி ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு  சாங் தெக்கிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் மரியா ஹார்ப் கூறுகையில், ‘ இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், சர்வாதிகாரத்தின் கோரமுகத்திற்கு இது இன்னொரு உதாரணமாக இருக்கும்.இந்த பிரச்சனையை அமெரிக்கா கவனத்துடன் கண்காணித்து வருகிறது ’ என்றார்.