இஸ்லாம், குர்ஆனை நிந்தித்தால்,முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தடுக்கமுடியாது !!
முஸ்லிம்களின் உயிர் மூச்சான இஸ்லாத்தையும் குர்ஆனையும் நிந்தித்தால், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை யாராலும் தடுக்கமுடியாது என்று இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பௌத்த சாசன அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விகார அமைச்சு, சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சுக்கள் மீதான குழு நிலைவிவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் முஸ்லிம்கள இஸ்லாத்தை பின்பற்றக்கூடாது, பள்ளிவாசல்களுக்கு செல்லக்கூடாது என சில இனவாதிகள் கூறுகின்றனர். ஆனால், எம்மால் இப்படி வாழமுடியாது. இஸ்லாம்தான் எங்கள் உயிர்மூச்சு. அதற்காகத்தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் முதலில் தமிழ் தலைவர்களையே படுகொலை செய்தனர். அதேபோல முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினால் எம்மையே முதலில் படுகொலை செய்வார்கள்.
நாடு கடந்த 30 வருடங்கள் யுத்தத்தால் அழிவடைந்தது. இந்த நிலையில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினால் நாடு மேலும் 60 வருடங்களுக்கு மேலாக மோசமான நிலைமைக்கு தள்ளப்படும். இலங்கை பௌத்த நாடாக இருந்தாலும் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது. நாமும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அத்தோடு, ஐ.எஸ்.அமைப்பு என்பது முஸ்லிம் அமைப்பு அல்ல என்பதையும் அதில் உள்ளவர்கள் முஸ்லிம்களும் அல்லர் என்பதையும் கூறிக்கொள்ள வேண்டும். அது மேற்குலக நாடுகளின் கூலிப்படைகளுள்ள அமைப்பாகும்' என தெரிவித்துள்ளார்.
0 Comments